search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்"

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி, மராட்டியத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி, ஜார்கண்ட் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ரோஹித் மோத்வானி 52 ரன்னும், கேப்டன் ராகுல் திரிபாதி 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் அன்குல் ராய் 4 விக்கெட்டும், ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், வருண் ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலக்கை நோக்கி ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்கையில் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஜார்கண்ட் அணிக்கு 34 ஓவர்களில் 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜார்கண்ட் அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனந்த் சிங் 12 ரன்னிலும், கேப்டன் இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷஷீம் ரதோர் 53 ரன்னுடனும், சவுரப் திவாரி 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பெங்களூருவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சந்தீப் 96 ரன்கள் எடுத்தார். கேப்டன் அம்பத்தி ராயுடு 28 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆந்திர அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 95 ரன்னும், ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூருவில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி கடைசி லீக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. #VijayHazareTrophy
    சென்னை:

    37 அணிகள் இடையிலான விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக அணி தனது கடைசி லீக்கில் நேற்று அரியானாவை, சென்னையில் சந்தித்தது. முதலில் பேட் செய்த அரியானா அணி 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் திவேதியா 91 ரன்களும் (8 பவுண்டரி, 5 சிக்சர்) ஹிமான்ஷூ ராணா 89 ரன்களும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய தமிழக அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 233 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் அரியானா 77 ரன்கள் வித்தியாசத்தில் 6-வது வெற்றியை பதிவு செய்து கால்இறுதியை உறுதி செய்தது. தமிழக அணியில் அபினவ் முகுந்த் (47 ரன்), கேப்டன் விஜய் சங்கர் (44 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. முரளிவிஜய் 24 ரன்னில் கேட்ச் ஆனார்.

    இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கால்இறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில், தோல்வியை தழுவியதன் மூலம் தமிழக அணி வெளியேற்றப்பட்டது. 9 ஆட்டங்களில் விளையாடிய தமிழக அணி 5 வெற்றி, 4 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் தனது பிரிவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ‘ஏ’ பிரிவில் மும்பை (28 புள்ளி), மராட்டியம் (26), ‘பி’ பிரிவில் டெல்லி (26) , ஆந்திரா (26), ஐதராபாத் (22), ‘சி’ பிரிவில் அரியானா (28) ஜார்கண்ட் (28), கீழ்நிலை பிரிவான ‘பிளேட்’ பிரிவில் பீகார் (30) ஆகிய அணிகள் கால்இறுதியை எட்டின. ‘சி’ பிரிவில் மட்டும் இன்னும் மூன்று சம்பிரதாய லீக் ஆட்டங்கள் நாளை நடக்க உள்ளன. அதன் பிறகு 14-ந்தேதியில் இருந்து கால்இறுதி சுற்று தொடங்கும்.

    இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் ஓய்வில் இருக்கும் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, இந்த தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார். அவர் மும்பை அணிக்காக கால்இறுதியில் ஆடுவார்.  #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் திரிபுரா அணியை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது. 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். #VijayHazareTrophy
    சென்னை:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, திரிபுராவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த திரிபுரா அணி 46.4 ஓவர்களில் 196 ரன்களுக்கு சுருண்டது.

    தமிழகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளும், ரஹில் ஷா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 31.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அபினவ் முகுந்த் 131 ரன்கள் விளாசி (100 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். தமிழக அணி அடுத்த லீக்கில் வருகிற 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீரை சந்திக்கிறது. #VijayHazareTrophy


    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெங்காலை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது. 6-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 4-வது வெற்றியாகும். #VijayHazareTrophy
    சென்னை:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, பெங்காலை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 49.4 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    விஜய்சங்கர் 4 விக்கெட்டுகளும், முகமது 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 42 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெகதீசனும் (55 ரன்), அபினவ் முகுந்தும் (94 ரன்) அரைசதம் அடித்து வெற்றியை எளிதாக்கினர். 6-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 4-வது வெற்றியாகும். #VijayHazareTrophy
    ×